செய்திகள்
கொரோனா பாதித்த இளம்பெண் - கோப்புப்படம்

கொரோனா பாதித்த இளம்பெண் பச்சிளங் குழந்தையுடன் 2 மணிநேரம் அலைகழிப்பு

Published On 2020-07-08 06:28 GMT   |   Update On 2020-07-08 06:28 GMT
கொரோனா பாதித்த இளம்பெண்ணை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்ததால், சுமார் 2 மணிநேரம் அவர் பச்சிளங்குழுந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்துக்கிடந்தார்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த சனிக்கிழமை ஈராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த இளம்பெண் கோவில்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் அந்த இளம்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இரவு 10 மணிக்கு அந்தப் பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பதாக ஈராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மீண்டும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், பச்சிளங்குழந்தையுடன் இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

ஆனால், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த ஆஸ்பத்திரிக்கு வெளியே சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த இளம்பெண், பச்சிளம் குழந்தையுடன் தனியார் ஆம்புலன்சில் பரிதாபமாக காத்துக் கிடந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய நிலையில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ்சில் இருந்து கைக்குழந்தையுடன் அந்த இளம்பெண் 108 ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொரோனா பரிசோதனை முடிவு குழப்பம், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுப்பு என குழந்தை பிரசவித்த இளம்பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News