செய்திகள்
நெல்லையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ள பழங்களை காணலாம்.

நெல்லையில் விற்பனைக்கு வந்த முட்டை பழம்

Published On 2020-07-03 11:06 GMT   |   Update On 2020-07-03 11:06 GMT
நெல்லையில் முட்டை பழம் விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படும் இந்த பழத்தின் சதைப்பகுதி மாவு போல் உள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ காற்றும், பருவ மழையும் பெய்யும். இந்த ஆண்டு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், பின்னர் மழை பெய்யாமல் பொய்த்து விட்டது.

இதனால் இந்த மழையை எதிர்பார்த்து மேற்கொள்ள வேண்டிய விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு ஒருபுறம் இருந்தாலும் குற்றாலம் சீசனும் காணாமல் போய் விட்டது.

குற்றாலம் சீசனையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதையொட்டி மாம்பழம், பலாப்பழம் விற்பனை களை கட்டும். அதோடு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த பழங்களையும் வியாபாரிகள் வரவழைத்து விற்பனைக்காக சாலையோர கடைகளில் குவித்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு சீசன் இல்லாவிட்டாலும், வழக்கம் போல் பழங்கள் வரத்து உள்ளது.

இதில் முட்டை பழம் என்றொரு பழமும் வந்துள்ளது. அச்சு அசலாக மாம்பழம் போல் காட்சி அளிக்கும் இந்த பழம் முட்டை பழம் என்றழைக்கப்படுகிறது. மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படும் இந்த பழத்தின் சதைப்பகுதி மாவு போல் உள்ளது.

நெல்லையில் இந்த பழம் முருகன்குறிச்சி உள்பட சாலையோர பழக்கடைகளில் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த முட்டை பழம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், “இந்த பழம் சளிக்கு மருந்தாகவும், ஜீரண மண்டலத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்க கூடியதாகும். இது மாம்பழ சீசனையொட்டி காய்த்து பழம் பறிக்கப்படும். தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியிலும் கேரளாவிலும் மலையடிவார பகுதிகளையொட்டி இந்த பழம் விளைவிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு மாம்பழம் போல் காட்சி அளித்தாலும் உள்ளே சதைப்பகுதி மாவு போல் இருக்கும். இந்த பழங்கள் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்கிறோம்” என்றனர்.

இதுதவிர குற்றாலம் சீசனையொட்டி வரக்கூடிய ரம்டான் பழம், பன்னீர் கொய்யா, மங்குஸ்தான், பிளம்ஸ் போன்ற பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவற்றின் விலை ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை ஆகிறது.
Tags:    

Similar News