செய்திகள்
ஏஐசிடிஇ

என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்- ஏஐசிடிஇ அறிவிப்பு

Published On 2020-07-03 01:48 GMT   |   Update On 2020-07-03 01:48 GMT
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான வகுப்புகள் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) அறிவித்து இருக்கிறது.
சென்னை:

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான காலமும் கடந்துவிட்ட நிலையில், எப்போது கல்லூரிகள் திறக்கப்படும்? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின்(ஏ.ஐ.சி.டி.இ.) 62-வது கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதன்படி நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்பது குறித்த தகவல்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அட்டவணை விவரம் வருமாறு:-

* பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும்.

* என்ஜினீயரிங் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்டு 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். மொத்தத்தில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடித்துவிடவேண்டும்.

* ஏற்கனவே என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம் (பழைய அட்டவணையில் ஆகஸ்டு 1-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது). புதிதாக என்ஜினீயரிங் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.

* தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை 15-ந்தேதி தொடங்கலாம். இந்த படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு கடைசி தேதி ஆகஸ்டு 10-ந்தேதி ஆகும். நடப்பாண்டு கல்விக்காலம் என்பது ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னும் ஒருவாரத்தில் அதுதொடர்பாக ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனர். 
Tags:    

Similar News