செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

சாத்தான்குளம் வழக்கு- உத்தரவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published On 2020-07-02 07:18 GMT   |   Update On 2020-07-02 07:18 GMT
சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.
மதுரை:

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?. கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர்.

5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல்துறையினர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் பெண் காவலரின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்தனர்.

பெண் காவலர் ரேவதி மற்றும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News