செய்திகள்
பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த வியாபாரி - மகன் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்

Published On 2020-06-28 10:37 GMT   |   Update On 2020-06-28 10:37 GMT
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த வியாபாரி-மகன் குடும்பத்தினருக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், மவுன ஊர்வலம் நடந்தது. வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு நேற்று மாலையில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அவர், அங்கிருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகனின் நிலை அனைவருக்கும் தெரியும். காவல் துறை செய்த படுகொலையைக் கண்டித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியும் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தபோது, அவர்கள் கூறிய வார்த்தைகள் பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. தந்தை-மகன் சாவுக்கு காரணமான அ.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில், பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும், ஜெயராஜ் காய்ச்சல் காரணமாகவும் இறந்தனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதன் அடிப்படையில் கூறினார்?. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லையெனில், சி.பி.ஐ. விசாரணை நடத்த தி.மு.க. வழக்கு தொடரும்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் டாஸ்மாக் கடைகளை திறந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவதை கண்காணிக்காததால், நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதனை போலீசார் கண்டுகொள்ளாமல், அப்பாவி தந்தை-மகனை படுகொலை செய்துள்ளனர்.

இனிமேலும் இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடக்க கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. வியாபாரிகள் படுகொலைக்கு காரணமாக அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News