செய்திகள்
கைது செய்யப்பட்ட செல்வம், சரவணராஜி.

போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - 2 பேர் கைது

Published On 2020-06-23 07:43 GMT   |   Update On 2020-06-23 07:43 GMT
போலீஸ் வேலை வாங்கித் தருவதாக 21 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சிவகுமார் (வயது 24). இவர் தமிழ்நாடு காவல்துறையில் சேர முயற்சி செய்து வருகிறார். பணியில் சேர ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டார். ஆனால் அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவகுமாருக்கு துருகம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (25), எஸ்.எம்.நகரைச் சேர்ந்த சரவணராஜி (25) ஆகியோரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சிவக்குமாரிடம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் போலீஸ் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனர். வேலைக்கு ஆசைப்பட்டு சிவகுமார் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலையும், வாங்கிக்கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த சிவகுமார் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணகுமார் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் செல்வம், சரவணராஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து மேல்விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட இருவரும் சிவகுமாரை போல் மேலும் 20 பேரை ஏமாற்றி உள்ளனர். அவர்களிடம் காவல் துறையில் போலீஸ் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் ரூ.30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

இருவரும் வேலை தேடும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்து பண மோசடி செய்துள்ளனர். இருவரிடம் இருந்து 3 கார்கள், அவர்கள் ஏமாற்றிய 21 பேரின் அசல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாற்றுச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News