செய்திகள்
மின்சாரம் தாக்கி இறந்து கிடக்கும் மோகன பிரியா.

திருமணமான 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி

Published On 2020-06-13 10:38 GMT   |   Update On 2020-06-13 10:38 GMT
ராசிபுரம் அருகே, திருமணமாகி 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி இறந்தார்.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகேயுள்ள அத்திபலகானூர் கிராமம் தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் சிவா என்கிற பிரபாகரன் (வயது 22). இவர் ராசிபுரத்தில் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மோகன பிரியா (19). இவர் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். மோகன பிரியாவும், சிவாவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்கள் முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து மோகனபிரியா, கணவர் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் அவரது கணவர் சிவா ராசிபுரத்தில் உள்ள பூக்கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். சிவாவின் தந்தை செந்தில் மற்றும் தாயார் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்து வந்த மோகன பிரியா நேற்று காலையில் அவரது வீட்டுக்கு தண்ணீர் வந்துள்ளதை பார்த்தார். அப்போது அவர் தண்ணீர் பைப்பில் இருந்து தொட்டிக்கு தண்ணீரை ஏற்ற மின்சார பிளக்கை போட்டுவிட்டு, பைப்பை மோட்டாரில் சொருகியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் மயங்கி விழுந்த அவரை ஆட்டோ மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே மோகன பிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மோகன பிரியாவின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி மோகன பிரியா இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள், கிராம மக்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவு அடையாததால் மோகன பிரியாவின் மரணம் குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுபற்றி மோகன பிரியாவின் தந்தை ராஜேஸ் கொடுத்த புகாரின்பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணமான 4 மாதங்களில் கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News