செய்திகள்
உயிரிழந்த கர்ப்பிணி யானை

யானைகள் கொல்லப்படும் சம்பவத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?- அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு

Published On 2020-06-06 02:45 GMT   |   Update On 2020-06-06 02:45 GMT
யானைகள் கொல்லப்படும் சம்பவத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்பது குறித்து மத்திய மற்றும் கேரள வனத்துறை அதிகாரிகள் குழு அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். யானை கொல்லப்பட்ட விவகாரத்தை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்தது. இந்த வழக்கை நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் விசாரித்தனர். பின்னர், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். யானையின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்வது குறித்தும், அவர்களிடம் இருந்து இழப்பீடு வசூல் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும் மத்திய மற்றும் கேரள வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News