செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-27 14:30 GMT   |   Update On 2020-05-27 14:30 GMT
சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே முளங்குழியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மும்பையில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டார். ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் பொது போக்குவரத்து அனைத்தும் முடங்கியுள்ளதால் ஊருக்கு வர முடியாமல் பரிதவித்தார்.

இதையடுத்து மும்பையில் இருந்து குமரிக்கு புறப்பட்ட சரக்கு லாரி டிரைவரின் துணையை நாடினார். அவரிடம் தன்னை லாரி கிளனர் போல் அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு லாரி டிரைவரும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி வரை வந்தார். அங்கிருந்து அவர் ஊரிலுள்ள 2 நண்பர்களை வரவழைத்து அவர்கள் மூலம் மோட்டார் சைக்கிளில் முளங்குழிக்கு சென்றார்.

மும்பையில் இருந்து வந்த வாலிபர் ஆரல்வாய்மொழியில் முறையாக பரிசோதனை செய்யவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், சுகாதார அலுவலர் ஜெனின் செல்வகுமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முளங்குழியில் வாலிபரின் வீடு அமைந்துள்ள பகுதியை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொண்டனர். அந்த வாலிபரை ஆரல்வாய்மொழியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த 2 நண்பர்களையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், அந்த பகுதியை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News