செய்திகள்
ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கியபோது எடுத்தபடம்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி

Published On 2020-05-27 14:03 GMT   |   Update On 2020-05-27 14:03 GMT
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
தர்மபுரி:

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரியை அடுத்த சவுளூர், அதகபாடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 200 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது ஆட்டோக்களில் பயணிகளை அனுமதிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், கே.நடுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு அப்பாமணி, அதகபாடி ஊராட்சிமன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா இ-கிராம திட்ட அலுவலகத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, தாசில்தார் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News