செய்திகள்
கோப்புப்படம்

ரத்த சொந்தத்தை மறக்க வைத்த கொரோனா - தம்பியை வீட்டுக்குள் அனுமதிக்காத அண்ணன்

Published On 2020-05-25 14:47 GMT   |   Update On 2020-05-25 14:47 GMT
சென்னையில் இருந்து வந்த தம்பிக்கு கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தில் அவருடைய அண்ணன் வீட்டுக்குள் அனுமதிக்காதது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை:

ரத்த சொந்தத்தை கொரோனா எனும் கொடிய நோய் மறக்க வைத்துள்ளது. சென்னையில் இருந்து வந்த தம்பிக்கு கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தில் அவருடைய அண்ணன் வீட்டுக்குள் அனுமதிக்காதது பட்டுக்கோட்டை மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர் சென்னை தாம்பரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கொரோனா நோய் தாக்குதலால் ஓட்டல் மூடப்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன்பு அவர் பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்தார்.

சென்னையில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தில் அண்ணன், அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் உள்ள அண்ணா அரங்க மேடையில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்தார்.

அவருடைய உறவினர்கள் யாரும் அவருக்கு உணவளிக்க முன்வராததால் பட்டினியால் வாடினார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் அங்கு சென்று சென்னையில் இருந்து வந்த ஓட்டல் ஊழியரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரை மருத்துவமனையில் வைத்து தனிமைப்படுத்த இயலாது என்றும், பரிசோதனை முடிவு வரும் வரை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்று தனித்து இருக்க அறிவுறுத்தும்படி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரை அண்ணன் வீட்டில் சேர்க்க மறுத்துவிட்டனர்.

தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை அணுகினார். அவர்கள் ஓட்டல் ஊழியரின் அண்ணனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவருடைய அண்ணன் தனது வீட்டின் பின்புறம் உள்ள தனி அறையில் அவரை தங்க வைக்க சம்மதம் தெரிவித்தார்.

அதன் பேரில் சென்னை ஓட்டல் ஊழியர் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவருக்கு அண்ணன் வீட்டில் உணவு அளிக்க மறுத்து விட்டனர். நகராட்சி ஏற்பாட்டின் பேரில் அம்மா உணவகத்தில் இருந்து தொண்டு நிறுவன பணியாளர்கள் மூலம் அவருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து வந்த ஓட்டல் ஊழியர் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர். எப்போதாவது ஊருக்கு வந்து செல்வார். திருமணமாகாத அவருக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்.

ஓட்டல் ஊழியருக்கு ஏற்பட்ட இந்த நிலை கொரோனா எனும் கொடிய நோய் ரத்த சொந்தத்தையே மறக்க வைத்து விட்டதோ? என நினைக்க வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News