செய்திகள்
சங்கர்

மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலி

Published On 2020-05-04 12:21 GMT   |   Update On 2020-05-04 12:21 GMT
சிவகிரியில் மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி சிவராமலிங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவர் வெளிநாட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 35). இவர் சிவகிரியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் சங்கர் (18), மகள் மகேஸ்வரி (16).

சிவகிரியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் சங்கர் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தினால் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் இருந்து வந்தார். அவரது வீட்டிற்கு முன்பாக சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தடியில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை 10 மணியளவில் சிறுவர்கள் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதை சங்கர் அங்கு அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அரச மரத்தின் ஒரு பெரிய கிளை திடீரென முறியும் சத்தம் கேட்டது. உடனே மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் பதறியடித்து, “தப்பித்தோம் பிழைத்தோம்“ என தலைதெறிக்க ஓடிவிட்டனர். ஆனால், விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கர், சுதாரித்து எழுந்திருந்து ஓடுவதற்குள் மரக்கிளை முறிந்து அவர் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News