செய்திகள்
வாட்ஸ்அப்

வெளியில் வந்தாலே பைக் பறிமுதல்: ‘வாட்ஸ்அப்’பில் பரவிய போலீஸ் அதிகாரி ஆடியோவால் பரபரப்பு

Published On 2020-04-25 13:28 GMT   |   Update On 2020-04-25 13:28 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மீறி வெளியே வந்தால் பைக் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ‘வாட்ஸ்அப்’பில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் வந்தாலே அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று பேசுவது போன்ற ஆடியோ ‘வாட்ஸ்அப்‘பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில், “நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நாளையில் இருந்து முக்கியமான தகவலை தெரிந்து கொள்ளுங்கள். நாளையில் இருந்து எக்காரணம் கொண்டும் பொருட்கள் வாங்க போகக்கூடாது. மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பறிமுதல் செய்ய சொல்லி விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்தாலே பறிமுதல்தான். அந்தந்த பகுதியில் காய்கறி கடை, பலசரக்கு, இறைச்சிக்கடை எல்லாமே உள்ளது. ஏரியா விட்டு ஏரியா சுற்றுகிறார்கள் என்பதால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விடுவார்கள். உங்களது ஏரியாவுக்குள் நடந்து போய் வாங்கலாம், அனைத்து கடைகளும் உள்ளது.

தன்னார்வலர்கள் பார்கோடுடன் கூடிய இ-பாஸ் வாங்கிக் கொள்ளுங்கள். மாநகராட்சியில் பேசி வாங்கிக்கொள்ளுங்கள். மாநகர போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டு இருக்கிறார். உதவி கமி‌ஷனர் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மூலம் ஆங்காங்கே வைத்து அப்படியே தூக்கப்போகிறார்கள். இதற்காக 5... 5... லாரிகள் கொடுக்கப்பட்டு உள்ளது“ என்று பேச்சு முடிவடைகிறது.

இதைக்கேட்ட அனைவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே வரலாமா? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். அரசு ஊழியர்கள் கூட அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வரமுடியுமா? என்று அந்தந்த துறை அதிகாரிகளிடம் சந்தேகம் கேட்டு உள்ளனர்.

ஆனால் இத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று திண்டுக்கல் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் அது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள மதுரை பகுதியில் போலீஸ் அதிகாரி பேசிய ஆடியோ எனவும் தெரியவந்தது. இதன்பிறகே திண்டுக்கல் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News