செய்திகள்
படகுகள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற காட்சி.

நாகை மீனவர்கள் தங்கி இருந்த படகுகள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன

Published On 2020-04-04 12:04 GMT   |   Update On 2020-04-04 12:04 GMT
நாகப்பட்டினத்தில் இருந்த தூத்துக்குடி செல்வதற்காக நாகை மீனவர்கள் தங்கி இருந்த படகுகள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன
ராமேசுவரம்:

கடந்த மாதம் 14-ந் தேதி நாகப்பட்டினம், ராமேசுவரத்தை சேர்ந்த 10 படகுகளில் இருந்த 77 மீனவர்கள் கேரள ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று விட்டு கடந்த 27-ந் தேதி மீண்டும் கேரளா திரும்பினர். அங்கு கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தை சேர்ந்த படகுகளை நிறுத்த அனுமதிக்கவில்லை. மேலும் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து 10 படகுகளுடன் வந்த மீனவர்கள் கடந்த 1-ந் தேதி பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் படகுகளை நிறுத்தியிருந்தனர். அந்த படகுகளில் 2 படகுகள் ராமேசுவரத்தை சேர்ந்தது என்பதால், அவற்றில் இருந்த 16 மீனவர்கள் மட்டும் கரைக்கு வந்தனர். அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால் மற்ற 8 படகிலிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 61 மீனவர்கள் படகை விட்டு இறங்கி கரைக்கு வர மாட்டோம் என்றும், தூக்குப்பாலம் திறந்த பின்பு சொந்த ஊரான நாகைக்கு சென்று விடுகிறோம், அது வரையில் படகிலேயே தங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து நாகை மீனவர்கள் பாம்பனில் படகுகளை நிறுத்தியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் வீரராகவராவ் எடுத்த நடவடிக்கையால் பாம்பன் தூக்குப்பாலம் நேற்று பகல் 11.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நாகையை சேர்ந்த 8 படகுகளும், நேற்று நாகபட்டினத்திற்கு செல்ல வந்த 2 படகுகளையும் சேர்த்து மொத்தம் 10 படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றன. அதே போல் நாகப்பட்டினத்தில் இருந்த தூத்துக்குடி செல்வதற்காக வந்த 5 படகுகளும், தூக்குப்பாலத்தை கடந்து தூத்துக்குடி நோக்கி சென்றன.

மேலும் மண்டபம் பகுதியை சேர்ந்த 25 விசைப்படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து மண்டபம் வடக்கு துறைமுக கடலுக்கு கொண்டு போய் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
Tags:    

Similar News