செய்திகள்
ரேசன் அரிசி

முட்டத்தில் சோதனை- கேரளாவுக்கு கடத்த முயன்ற 1350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2020-03-19 09:31 GMT   |   Update On 2020-03-19 09:31 GMT
முட்டம் பஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தக்கலை:

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வருவாய் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரி ஜாண் கெனி தலைமையில் வருவாய் ஆய்வாளர் செய்யதலி மற்றும் ஊழியர்கள் தக்கலை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது முட்டம் கடற்கரை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரசகிய தகவல் கிடைத்தது.

உடனே அதிகாரிகள் முட்டம் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் சோதனை செய்தபோது பஸ் நிலையம் பகுதியில் நின்ற 2 பேர் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடினர். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது சிறுசிறு சாக்கு மூடைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

மொத்தம் 16 சாக்குகளில் 1350 கிலோ ரேசன் அரிசி இருந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை குளச்சலில் உள்ள கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

முட்டம் பஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதனை கடத்த முயன்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

முட்டம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில் நேற்றும் 1250 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இன்றும் முட்டத்தில் 1350 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News