செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 56 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல்

Published On 2020-03-04 04:05 GMT   |   Update On 2020-03-04 04:05 GMT
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றியும், அனுமதியை புதுப்பிக்காமலும் இயங்கிய 56 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் அனுமதியின்றி இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாவட்டம் முழுவதும் அனுமதி பெறாத குடிநீர் சுத்திரிகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் நீரோட்ட பகுதியில் ஏராளமான குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

அந்த பகுதியில் ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அப்போது அனுமதி பெறாமல் இயங்கியதாக 31 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கிய 5 சுத்திகரிப்பு ஆலைகள் என மொத்தம் 36 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த 5 நாட்களாக நடந்த அதிரடி நடவடிக்கையில் இந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கேன் குடிநீருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று கேன் குடிநீர் விற்பனையாளர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை சமாளிக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகத்தினர் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறும்போது, விதிகளை மீறிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பு குழு மூலம் ஆய்வு செய்து வருகிறோம். உரிய அனுமதி பெற்றவர்கள் குடிநீர் எடுக்கலாம். மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் 27 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றில் 17 ஆலைகள் அனுமதி பெறாமலும், 3 ஆலைகள் அனுமதியை புதுப்பிக்காமலும் இயங்கி வந்தன. எனவே இந்த 20 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Tags:    

Similar News