செய்திகள்
வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2020-02-18 11:51 GMT   |   Update On 2020-02-18 11:51 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மூன்றடைப்பு மருதகுளத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், வாபஸ் பெறக் கோரியும் எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும் பல்வேறு கட்ட போராட் டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடையநல்லூர், புளியங்குடி, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பாளை ரஹ்மத் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகள் குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வகுப்புகளுக்கு செல்வதை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து இன்று நெல்லையை அடுத்த மூன்றடைப்பு மருதகுளத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த தடியடியை கண்டித்தும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் அவர்கள் கோ‌ஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் மேலப்பாளை த்தில் நடந்து வரும் தொடர் தர்ணா போராட்டம் இன்றும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், சிறுவர்- சிறுமியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News