செய்திகள்
கோப்பு படம்

சொத்தை அபகரிக்க முயன்றதாக புகார் - திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2020-02-17 11:44 GMT   |   Update On 2020-02-17 11:44 GMT
சொத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கூட்டத்துக்கு வந்த ஒரு பெண் திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் ஜெயந்தி. வத்தலக்குண்டு வடக்குத் தெருவில் எனது கணவர் ஆல்பர்ட் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சின்னுப்பட்டி கிராமத்தில் எனக்கு சொந்தமான வீடும், அதைச் சுற்றி காலி இடமும் உள்ளது. எனவே சொத்தை அபகரிக்கும் முயற்சியில் அதே பகுதியைச் சேர்ந்த அருள்சாமி, முனியம்மாள், இவர்களது மகன் பாலு, அவரது மனைவி நிர்மலா ஆகியோர் செயல்படுகின்றனர்.

இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இடத்தை அளந்து சர்வேயர் எங்களுக்கு சான்றிதழ் வழங்கினார். எனது இடம் என்பதற்கான ஆவணங்கள் உள்ள போதிலும் தொடர்ந்து எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி வருகிறார்கள்.

தடுக்க வந்த எங்கள் மீது கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதனையடுத்து தனது புகார் மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார்.

Tags:    

Similar News