செய்திகள்
பெண் போலீஸ்

கலெக்டர் பங்களாவில் பணியில் இருந்த பெண் போலீஸ் கால் முறிந்தது

Published On 2020-02-11 09:52 GMT   |   Update On 2020-02-11 09:52 GMT
நாகர்கோவிலில் இன்று காலை கலெக்டர் பங்களாவில் பணியில் இருந்த பெண் போலீஸ் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் அவரது கால் முறிந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் நாகர்கோவில் கோணத்தில் உள்ளது.

இங்கு தினமும் ஆயுத படை போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள். இன்று காலை ஆயுத படை பெண் போலீஸ் சித்ரா (வயது 35) என்பவர் இங்கு பணிக்கு வந்தார்.

காலை 6 மணிக்கு வந்த அவர் காவல் பணியில் இருந்தார். காலை 8 மணிக்கு இங்குள்ள குப்பைகளை அள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி வந்தது.

அதனை கண்ட பெண் போலீஸ் சித்ரா, லாரி உள்ளே வருவதற்காக பங்களாவின் கேட்டை திறந்தார். அதற்குள் லாரியை டிரைவர் இயக்க, லாரி, பங்களா கேட்டை இடித்து தள்ளியது.

இதில் காம்பவுண்ட் மதில் சுவர் இடிந்து விழுந்தது. மதிலுக்கு அருகே நின்ற பெண் போலீஸ் சித்ரா மீதும் இடிபாடுகள் விழுந்தது.

படுகாயம் அடைந்த சித்ரா அலறினார். சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்தனர். அவர்கள் சித்ராவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பெண் போலீஸ் சித்ராவின் காலில் முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

படுகாயம் அடைந்த சித்ரா ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர். இவரது கணவர் வில்சன். இன்று காலையில் தான் சித்ரா வீட்டில் இருந்து கலெக்டர் பங்களாவுக்கு பணிக்கு வந்தார்.

பெண் போலீஸ் சித்ரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு தெரியவந்தது. உடனே அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி சென்று பெண் போலீஸ் சித்ராவை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கவும் டாக்டர்களிடம் கேட்டு கொண்டார்.

இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் அறிந்து ஆசாரிபள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் குப்பை லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் பங்களா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News