செய்திகள்
கோப்பு படம்

கரூரில் மக்களிடம் மின்கட்டணம் வசூலித்துவிட்டு செலுத்தாமல் தப்பி ஓடிய ஊழியர்

Published On 2020-01-25 17:27 GMT   |   Update On 2020-01-25 17:27 GMT
கரூரில் சுமார் ரூ.1 லட்சம் வரை பொதுமக்களிடம் மின் கட்டண தொகையினை வசூலித்துக்கொண்டு தப்பிச்சென்ற ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்:

கரூர் ராயனூரில் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள், வர்த்தக நிறுவனத்தினர் மின்கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை யொட்டி கடந்த 7-ந்தேதி முதல் மின் கட்டணம் செலுத்துவதற்காக ஏராளமான நுகர்வோர்கள் அலுவலகத்திற்கு வந்து கட்டணம் செலுத்தினர். அப்போது மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவரிடம் பலரும் பணம் கொடுத்துவிட்டு சென்றனர். ஆனால் மின் வாரியத்தின் கணக்கில் வரவு வைக்கவில்லை.

பணம் செலுத்தாததையடுத்து மின் வாரிய ஊழியர்கள், பணம் செலுத்தாத வணிக நிறுவனங்கள், அப்பார்ட் மெண்ட்கள், வீடுகளின் மின் இணைப்பினை துண்டித்தனர். இதனால் வீடுகள், விசைத்தறி கூடங்கள் இருளில் மூழ்கின.பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேராக மின்வாரிய அலுவலகம் சென்றனர். அங்கு முருகேசனை காணவில்லை. அவர் அலுவலகம் வந்து சில நாட்கள் ஆவதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் சுமார் ரூ.1 லட்சம் வரை பொதுமக்களிடம் மின் கட்டண தொகையினை வசூலித்துக்கொண்டு அவர் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மீண்டும் பொதுமக்கள் அபராத தொகையுடன் பணம் செலுத்தி விட்டு பீஸ் கட்டையை வாங்கி சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் தெரிவிக்கும்போது, நம்பிக்கையில் முருகேசனிடம் பணம் கொடுத்தோம். ஆனால் அவரோ எங்களை ஏமாற்றி விட்டார் என்றனர். அதிகாரிகள் ஓரிரு நாளில் பணத்தை வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News