செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

அதிகாரிகளை துன்புறுத்துவது நீண்டகாலம் நீடிக்காது - கவர்னர் கிரண்பேடி

Published On 2020-01-24 09:20 GMT   |   Update On 2020-01-24 09:20 GMT
புதுவையில் அதிகாரிகளை துன்புறுத்துவது நீண்டகாலம் நீடிக்காது என்று கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்றத்தால் நியமிக்கப்பட்ட மாநில தேர்தல் ஆணையருக்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க கவர்னர் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித்துறை தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டது.

இது சட்டசபை உரிமை மீறல் என ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. புகார் அளித்ததால் உரிமை மீறல் குழு விசாரணை நடத்தி வருகிறது.

உரிமை மீறல் குழு முன்பு உள்ளாட்சித்துறை சார்பு செயலர், இயக்குனர், செயலர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். வரும் 27-ந் தேதி தலைமை செயலர் ஆஜராக அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாரிகள் மீதான விசாரணை நீண்டகாலம் நீடிக்காது என கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். கவர்னர் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகள் மீண்டும், மீண்டும் தாக்கப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். உங்களை சமரசத்திற்கு அழைத்து பலவீனப்படுத்த இதுபோன்ற செயல்கள் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் திறமையை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள். நாம் நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்காக பணிக்கு வந்துள்ளோம். மறைமுகமாக செயல்படும் ஒரு சிலரின் சுய லாபத்திற்காக நாம் பணியாற்ற வரவில்லை. சிலரின் சொந்த நலன் முயற்சிகளை சமீபகாலமாக நாம் உடைத்தெறிந்து மாநிலத்தை சுத்தப்படுத்தி உள்ளோம்.

உங்களுக்கு தற்போது சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

ஆனால் இது நிலையல்ல, வாழ்க்கையில் ஒரு அங்கம். எந்த நிர்வாகத்திலும் நடக்கும் ஒன்றுதான். தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காவிட்டால் தோல்வியுற்றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இது மனித இயல்பு.

ஆனால், நாம் எப்போதும் நிர்வாகத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இதுதான் நம் கடமை, பொறுப்பு என உணருங்கள். எந்த விலை கொடுத்தாவது நல்ல வளர்ச்சியை நாம் கொடுக்க வேண்டும். இதைத்தான் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

சிலருக்கு இது முதல் முறையாக இருக்கலாம், சிலருக்கு கடைசி முறையாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் செயலில் நேர்மையாக இருந்தால் எப்போதும் பாதுகாக்கப்படுவோம். நாம் பொறுப்புடன் கவனமாக பதிலளிக்க வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு, கவனமாக செயல்படுங்கள். இதை பலவீனமாக உணர வேண்டாம். உங்களை கொடுமைப்படுத்தி துன்புறுத்துவது, மன அழுத்தம் தருவது நீண்ட காலம் நீடிக்காது.

இதுபோன்ற சூழ்நிலைகளை காலத்திற்கேற்ப சமாளிக்க நாம் பயிற்சி எடுக்க வேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News