செய்திகள்
விபத்து

பாத யாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி

Published On 2020-01-17 09:52 GMT   |   Update On 2020-01-17 09:52 GMT
தாராபுரம் அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 2 பேர் உயிர் இழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக கடந்த செவ்வாய் கிழமை புறப்பட்டனர். தாராபுரம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் தங்கிய பாத யாத்திரை குழுவினர் நேற்று மாலை மீண்டும் பழனி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

தாராபுரம் அருகே உள்ள குட்டைகாடு என்ற இடத்தில் வந்த போது சென்னிமலையில் இருந்து தாராபுரம் பஞ்சப்பட்டியை நோக்கி வந்த கார் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து அவர்கள் மீது மோதியது.

இதில் சேலம் மாவட்டம் ஆலங்காட்டு வலசை சேர்ந்த குமார் (46), இவரது அண்ணன் மகனும் மொடக்குறிச்சி பொன்னம்மா பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவருமான ஜெய பிரகாஷ் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மேலும் மார்சிட்டி (50), குருநாதர் (58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாராபுரம் போலீசார் விபத்தில் பலியான இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்தவர் அசோக்குமார் என்பதும், பொங்கலுக்கு தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News