செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த 89 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2020-01-17 09:28 GMT   |   Update On 2020-01-17 09:28 GMT
ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த 89 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எலும்பு முறிவு, தலைக்காயம் உள்ளிட்ட துறை பிரிவுகளில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் பொங்கல் பண்டிகையை யொட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக 641 காளைகள் களமிறங்கின. இவற்றை அடக்குவதற்காக 610 வீரர்கள் கோதாவில் குதித்தனர்.

பொங்கல் பண்டிகை அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் 37 பேர் வீரர்கள்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயம் அடைந்த 66 பேருக்கும் திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதே போல் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 675 காளைகள் களம் இறக்கப்பட்டன. இவற்றை அடக்குவதற்காக 936 வீரர்கள் களத்தில் குதித்தனர். இதில் 23 பேருக்கு படுகாயம் ஏற்பட் டது. இதில் 6 பேர் வீரர்கள்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விபத்து சிகிச்சை பிரிவில் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயம் அடைந்த எவரும் அபாய நிலையில் இல்லை.

ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயம் அடைந்தோருக்கு சிகிச்சை தரும் வகையில் எலும்பு முறிவு, தலைக்காயம் உள்ளிட்ட துறை பிரிவுகளில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Tags:    

Similar News