செய்திகள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

அமைச்சரை ஒருமையில் பேசிய எம்.எல்.ஏ. -சட்டசபையில் அமளி

Published On 2020-01-07 07:45 GMT   |   Update On 2020-01-07 08:33 GMT
சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, உள்ளாட்சி துறை அமைச்சரை, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதால் அமளி ஏற்பட்டது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த முதல்வர், சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், இதை மத்திய அரசு சொல்வதாகவும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக உறுப்பினர் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரைப் பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. ஜெ.அன்பழகனை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ‘உட்கார்’ என சொல்வதும் ஒருமையில் பேசுவதும் தவறு என சபாநாயகர் தனபால் சுட்டிக்காட்டினார்.



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘அமைச்சரைப் பார்த்து எங்கள் உறுப்பினர் அன்பகழன் பேசியது தவறுதான், ஆனால், அதே வார்த்தையை உள்ளாட்சித்துறை அமைச்சரும் பேசியிருக்கிறார். இதற்கு சபாநாயகர் என்ன பதில் அளிப்பார்? ’ என கேள்வி எழுப்பினார். 

மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். அப்போது, ஜெ.அன்பழகன் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்ததால் மறப்போம், மன்னிப்போம்’ என்றார் ஓ.பி.எஸ். 

இதையடுத்து பேசிய சபாநாயகர், ‘உறுப்பினர் அன்பழகனுக்கு இது கடைசி வாய்ப்பு. அவையில் இனி இப்படி நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். 

இந்த விவகாரத்தால் சட்டசபையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

Tags:    

Similar News