செய்திகள்
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4,725 உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்

Published On 2020-01-06 07:38 GMT   |   Update On 2020-01-06 07:38 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 526 ஊராட்சி தலைவர்கள் 3,945 உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
திருவள்ளூர்:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி உறுப்பினர், 230 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 24 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம், 4,725 பதவிகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.

ஊராட்சி தலைவர், கவுன்சிலர் என 806 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள, 3,919 பதவிகளுக்கு, 13 ஆயிரத்து, 338 பேர் போட்டியிட்டனர்.

முதல் கட்டமாக, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, பூண்டி, கடம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய 8 ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி, முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

இரண்டாம் கட்டமாக, 30-ந்தேதி எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய ஆறு ஒன்றியங்களில் தேர்தல் நடந்தது.

இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14 வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. அன்றே வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சி தலைவர்கள் 3,945 உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதேபோல் 230 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

24 மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
Tags:    

Similar News