செய்திகள்
பலி

திருப்பூர் அருகே தந்தை வெற்றி மகிழ்ச்சியில் வாலிபர் மயங்கி விழுந்து பலி

Published On 2020-01-03 11:29 GMT   |   Update On 2020-01-03 11:29 GMT
திருப்பூர் அருகே உள்ளாட்சி தேர்தலில் தந்தை வெற்றி பெற்ற செய்தியை கேட்டு மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஊகாயனூர் ஊராட்சியில் உள்ள 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்த ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் நேற்று தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வந்தன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்திற்குள் சுப்பிரமணியம் சென்றார்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தந்தையின் வெற்றியை அறிவதற்காக அவருடைய மகன் கார்த்தி(21) தனது நண்பர்களுடன் நின்றிருந்தார்.

5-வது வார்டு வாக்குகள் எண்ணப்பட்டபோது தந்தைக்கு கிடைத்த ஓட்டுகளை அவ்வப்போது தெரிந்து கொண்டார்.

முடிவில் 5-வது வார்டு பதவிக்கு போட்டியிட்ட சுப்பிரமணியம் 240 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை 18 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை சுப்பிரமணியம் வெளியில் காத்திருந்த தனது மகனிடம் தெரிவித்தார். இதை கேட்டு கார்த்தி மிகவும் சந்தோ‌ஷம் அடைந்தார். உடனடியாக தனது தாய்க்கு போன் செய்து தந்தை வெற்றி பெற்றதை தெரிவித்தார். பின்னர் தனது நண்பர்களுடன் தந்தை வெற்றிபெற்றதை ஆடி,பாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென கார்த்தி மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவரது தந்தை மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். தந்தை வெற்றி பெற்ற செய்தியை கேட்டு மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News