செய்திகள்
கடலில் குளித்த 2 பேரை கடலோர போலீசார் மீட்ட காட்சி.

தனுஷ்கோடி கடலில் தடையை மீறி குளித்த 2 பேரை அலை இழுத்து சென்றது

Published On 2020-01-02 16:41 GMT   |   Update On 2020-01-02 16:41 GMT
தனுஷ்கோடி கடலில் தடையை மீறி குளித்த 2 பேரை அலை உள்ளே இழுத்து சென்றது. இதை பார்த்த கடலோர போலீசார் 2 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தினமும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்தில் கடலில் இறங்கி குளிப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தபோது அதில் ஒரு மாணவர் மட்டும் கடல் அலையில் மூழ்கி மாயமானார். இதுவரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாததுடன் உடலும் கரை ஒதுங்கவில்லை.

இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்காமல் இருக்கும் வகையில் கடலோர போலீசார் அரிச்சல்முனை வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடியில் இருந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த 2 இளைஞர்கள் அரிச்சல்முனை தென்கடலில் தடையை மீறி குளித்துள்ளனர். அப்போது 2 பேரும் கடல் அலையில் சிக்கி தவித்தனர். இதை பார்த்த கடலோர போலீசார் சுற்றுலா பயணிகள் உதவியுடன் அலையில் சிக்கி தத்தளித்த 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
Tags:    

Similar News