செய்திகள்
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டபோது எடுத்த படம்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி

Published On 2019-12-23 18:42 GMT   |   Update On 2019-12-23 18:42 GMT
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி, நேற்று 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது. இதில் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை கலெக்டர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரத்து 358 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை சிறந்த முறையில் நடத்திட, வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள் குறித்த அறிவுரைகளை கையேடாக அச்சடித்து, பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது, என்றார். அப்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, துணை கலெக்டர் அஸ்ரத்பேகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குமாரவேலு, ஆயி‌ஷாராணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் வருகிற 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக விராலிமலை ஒன்றியத்தில் 225 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியத்தில் தேர்தல் பணியாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 1,885 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் 1,361 பேருக்கு கடந்த 15-ந் தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி நேற்று விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் 1,301 பேர் கலந்து கொண்டனர். விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், உதவி தேர்தல் அலுவலருமான ரமேஷ் பயிற்சி அளித்தார். அப்போது வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. இதில் பார்வையாளர்களாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், உதவி தேர்தல் அலுவலருமான பவானி, விராலிமலை தாசில்தார் சதீஷ் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News