செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு- நாளை மனுக்கள் பரிசீலனை

Published On 2019-12-16 12:38 GMT   |   Update On 2019-12-16 12:38 GMT
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஏலம் விடப்பட்ட பதவிகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல். 
  • சென்னை மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. 
  • ஏலம் விடப்பட்ட பதவிகள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஏலம் விடப்பட்ட பதவிகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி சார்பின்றியும், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு காரணமாக மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த 27 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வருகிற 27-ந்தேதி 4,700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

30-ந்தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. 

வேட்புமனு தாக்கல் செய்ய 7 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை வரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். இன்று மலை 5 மணியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. கடைசி நாளான இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தகுதி இல்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அதன் பிறகு வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

19-ந்தேதி (வியாழக்கிழமை) மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அப்போது ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற தெளிவாக தெரிந்துவிடும்.

இதற்கிடையே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஏலம் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் கிராமத்துக்கு வருமானம் சேர்ப்பதற்காக பதவிகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.

சில பஞ்சாயத்துகளில் யாரை தேர்தலில் நிறுத்துவது என்பதற்கு கூட ஓட்டெடுப்பு நடத்தினார்கள். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் அதிகளவில் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் ஏலம் விடப்பட்டன.

சில உள்ளாட்சி அமைப்பு களுக்கு பதவிகள் ஏலம் விடப்பட்டபோது போலீசார் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தி விட்டனர். ஆனால் சில ஊர்களில் நடந்த ஏலத்தை போலீசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதவிகள் ஏலம் விடப்பட்டதை மாநில தேர்தல் ஆணையம் கண்டித்தது. ஆனால் அதையும் மீறி பதவிகள் ஏலம் விடப்படுவது தொடர்ந்தது. இதையடுத்து ஏலம் விடப்பட்ட பதவிகள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News