செய்திகள்
பெண் ஊழியர்களுக்கு ‘காவலன்’ செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது எடுத்த படம்.

ஜவுளி நிறுவன பெண் ஊழியர்களுக்கு ‘காவலன்' செயலி குறித்து விழிப்புணர்வு

Published On 2019-12-15 18:12 GMT   |   Update On 2019-12-15 18:12 GMT
கரூரில் ஜவுளி நிறுவன பெண் ஊழியர்களுக்கு ‘காவலன்’ செயலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கரூர்:

கைத்தறி நகரம் என சிறப்பு பெற்ற கரூரில் பல்வேறு ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலைகள், தலையணை உறை, மெத்தை விரிப்புகள், போர்வை, கு‌‌ஷன்ஸ், சமையலர்களுக்கான உடைகள், கைத்துடைக்கும் துண்டு, மேஜை விரிப்புகள் ஆகியவை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் என இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண் ஊழியர்கள், தொழிலாளர்கள் அதிகமாக பணி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக கரூர் வெங்கமேட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் ‘காவலன்’ செயலி பயன்பாடு குறித்து விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவரும், அந்நிறுவன உரிமையாளருமான அட்லஸ் நாச்சிமுத்து வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பேசுகையில், பெண்கள் நம் நாட்டின் கண்கள் போல பாவித்து செயல்படும் நம் நாட்டில், சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. திடீரென இக்கட்டான சூழலில் பெண்கள் தவிக்கின்ற போது, உடனடியாக உதவிக்கரத்தை நீட்டும் விதமாக ‘காவலன்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெருகி வரும் நாகரிக உலகில் பெரும்பாலானோர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பெரிதும் பயன்படுத்துகிறோம்.

எனவே இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும். ஜி.பி.எஸ். கருவி மூலம் அழைப்பு விடுத்தவரின் இடத்தை கண்டறிந்து உடனடியாக அருகேயுள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். பின்னர் நிகழ்ச்சியின் போது பெண் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ‘காவலன்’ செயலியை அவர் களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News