செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம் அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது

Published On 2019-11-26 10:31 GMT   |   Update On 2019-11-26 10:31 GMT
பாபநாசம் அணை நீர்மட்டம் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து இன்று காலை 141 அடியாக உயர்ந்தது. மழை தொடரும் பட்சத்தில் இன்னும் 2 நாட்களில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டங்களில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. நெல்லையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகபட்சமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1711 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று 139.90 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து இன்று காலை 141 அடியாக உயர்ந்தது. அணை நிரம்ப இன்னும் 2 அடி நீர்மட்டம் மட்டுமே தேவை. மழை தொடரும் பட்சத்தில் இன்னும் 2 நாட்களில் நிரம்பி விடும். சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 153.12 அடியாக உள்ளது. அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்ட 3 அடியே இருக்கிறது. அந்த அணையும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 873 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 75.75 அடியாக உள்ளது.

அடவிநயினார், குண்டாறு, கடனாநதி அணை கள் நிரம்பி வழிகிறது. ராமநதி, கருப்பாநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணைகள் மாறி மாறி நிரம்பி வருகிறது. கொடுமுடியாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளில் மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றால மலைப் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மெயினருவியில் ஆர்ச் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதேபோல் சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் வந்தனர்.
Tags:    

Similar News