செய்திகள்
அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.

பரமத்தி வேலூர் அருகே வெல்லத்தில் கலப்படம்- 2 ஆலைகளுக்கு சீல்

Published On 2019-11-24 17:05 GMT   |   Update On 2019-11-24 17:05 GMT
பரமத்தி வேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பகுதியில் வெல்லத்தில் கலப்படம் செய்த 2 வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்து அதிரடி நட வடிக்கை எடுத்தனர்.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அச்சு, உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சில வெல்ல ஆலைகளில் வெல்லங்களில் கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காக அஸ்கா சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பிலிக்கல்பாளையம் வெள்ளதாரை பகுதியில் சண்முகசுந்தரம் என்பவரது ஆலையில் வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 62 கிலோ சர்க்கரையையும், கலப்படம் செய்யப்பட்ட 2,400 கிலோ வெல்லத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சாமிநாதபுரத்தில் முனுசாமி என்பவரின் வெல்ல உற்பத்தி ஆலையில் மேற்கொண்ட சோதனையில் 1,750 கிலோ அஸ்கா சர்க்கரையையும், கலப்படம் செய்யப்பட்ட 260 கிலோ உருண்டை வெல்லத்தையும் உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, இரு ஆலைகளுக்கும் ‘சீல்' வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலப்படம் செய்யப்பட்ட அச்சு மற்றும் உருண்டை வெல்லங்களில் மாதிரி எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சோதனையின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News