செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல்லில் பணி இடமாற்றம் கேட்டு போராட்டம் நடத்திய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

Published On 2019-11-21 11:22 GMT   |   Update On 2019-11-21 11:22 GMT
திண்டுக்கல்லில் பணி இடமாறுதல் கேட்டு போராட்டம் நடத்திய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள பாடியூரைச் சேர்ந்தவர் இந்திரா. இவர் குஜிலியம்பாறை அருகே உள்ள அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தனக்கு பணி இடமாறுதல் வழங்க கேட்டு நேற்று முன்தினம் ஜான்பால் பள்ளியில் நடந்த கலந் தாய்வில் கலந்து கொண்டார்.

ஆனால் இவருக்கு பணி இட மாறுதல் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் முன்னிலையிலேயே தரையில் அமர்ந்தும், படுத்து உருண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தான் பணிபுரியும் பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே வருவதாகவும், அவர்களும் சரியாக வருவதில்லை என்றும் தெரிவித்து தனக்கு பணி இடமாறுதல் வழங்க வேண்டும்.

தான் மாற்றுத்திறனாளி என்பதால் அதிகாரிகள் தயவு கூர்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். 3 ஆண்டுகளாக இடமாறுதலுக்காக மனு அளித்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கலந்தாய்வில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை இந்திராவை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிகாரிகள் அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்க சென்றதால் கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முதன்மை கல்வி அலுவலர் வந்தவுடன் அவரிடம் நியாயம் கேட்டு பிறகுதான் செல்வேன் என தொடர்ந்து அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News