செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

மதுரை வலையங்குளத்தில் லாரி மோதி மாணவி பலி

Published On 2019-11-20 11:57 GMT   |   Update On 2019-11-20 11:57 GMT
வலையங்குளத்தில் 4 வழிச்சாலையை கடக்க முயன்ற மாணவி லாரி மோதி பரிதாபமாக பலியானார். மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது வலையங்குளம். இந்த கிராமம் மதுரை-தூத்துக்குடி செல்லும் 4 வழிச்சாலை பகுதியில் அமைந்துள்ளது. எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று லாரி மோதி மாணவி பலியான சம்பவம் நடந்துள்ளது.

வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் திவ்யா (வயது 12). அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இன்று காலை பள்ளிக்கு செல்ல 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் மாணவி திவ்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

தகவல் அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு அலட்சியம் செய்ததால் தான் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக கூறினர்.

இனிமேலும் உயிர்பலி ஏற்படாதவாறு தடுக்க அந்தப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மறியல் போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News