செய்திகள்
பிரதமர் மோடி

ஆசியான்-இந்தியா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்கிறார்

Published On 2019-11-02 04:17 GMT   |   Update On 2019-11-02 04:23 GMT
ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து செல்கிறார்.
புதுடெல்லி:

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசியான்  உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து புறப்பட்டுச் செல்கிறார். தாய்லாந்து சென்றடையும் மோடி, முதல் நாளில், தாய்லாந்தில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்ற உள்ளார். 

மேலும், குருநானக்கின் 550வது பிறந்த நாளைக் குறிக்கும் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளையும் வெளியிடுகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாளை 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டிற்கு, மோடியும் தாய்லாந்து பிரதமரும் இணைந்து தலைமை தாங்க உள்ளனர்.
Tags:    

Similar News