செய்திகள்
கோப்புப்படம்

வெள்ளியங்கிரி மலையில் மகாதீபம் ஏற்ற அனுமதி கேட்டு வழக்கு

Published On 2019-10-23 10:08 GMT   |   Update On 2019-10-23 10:08 GMT
வெள்ளியங்கிரி மலையில் மகாதீபம் ஏற்ற அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கோவை மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவில் உள்ளது.

இங்கு கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி டிசம்பர் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மகா தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் திண்டுக்கலை சேர்ந்த சரவணன் என்ற பக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கார்த்திகை மகாதீபத்தை ஒட்டி பக்தர்களை அழைத்து செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாக பக்தர்களை அழைத்து சென்று வருவதாக கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு முதல் வனத்துறை அனுமதி பெற்று கோவிலுக்கு சென்றுவரும் நிலையில் இந்த ஆண்டு மகாதீபம் ஏற்றவும், பூஜைகள் செய்யவும் அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 20ல் அரசுக்கு அனுப்பிய மனுவில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்ய நாராயணன், என்.சேசாயி அமர்வு வழக்கு குறித்து தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வன விலங்குகளுக்கு மட்டும் தானே தவிர, அவற்றை விட கொடியவர்களுக்கு கிடையாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News