செய்திகள்
கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்ட சமையல் அறை

நாகர்கோவில் அருகே பள்ளியில் கியாஸ் கசிந்து விபத்து: மாணவ-மாணவிகள் வெளியேற்றம்

Published On 2019-10-19 16:23 GMT   |   Update On 2019-10-19 16:23 GMT
நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் கியாஸ் கசிந்து வெளியேறியதையடுத்து மாணவ-மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.
நாகர்கோவில்:

இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி சிவன், நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளையைச் சேர்ந்தவர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தான் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார்.

தற்போது இந்த பள்ளியில் 69 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு பள்ளிக் கூடத்திலேயே மதிய உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக இந்த பள்ளிக்கூடத்தில் சத்துணவுக் கூடமும் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமையான இன்று இந்த பள்ளிக்கூடம் வழக்கம்போல் செயல்பட்டது. 55 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தார். ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.

மாணவர்களுக்கான மதிய உணவு சமைக்கும் பணியும் நடந்து கொண்டிருந்தது. பகல் 11 மணி அளவில் சமையல் அறையில் கியாஸ் கசிந்து வாடை வீசியது. இதை பார்த்ததும் சமையல் பணியாளர் கியாஸ் இணைப்பை சரி பார்த்தபோது சிலிண்டரில் இருந்து செல்லும் குழாயில் கசிவு காரணமாக கியாஸ் வெளியேறுவது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அடுப்பை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் கியாஸ் கசிந்த குழாயில் தீப்பற்றியது. உடனே அவர் தீயை அணைக்க முயற்சி செய்தார். அந்த முயற்சி பலன் அளிக்காததால் இதுபற்றி தலைமை ஆசிரியருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் மாணவ-மாணவிகளை பள்ளிக்கூடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கிடையே கியாஸ் கசிந்து தீப்பிடித்த தகவல் பரவியதால் மாணவ-மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் பரவி மாணவர்களின் பெற்றோரும் பள்ளிக்கூடத்துக்கு திரண்டனர். அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

தீ விபத்தில் சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள் மற்றும் அறைக்கதவும் சேதம் அடைந்தது.
Tags:    

Similar News