செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2019-10-09 04:05 GMT   |   Update On 2019-10-09 04:05 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 24 ஆயிரத்து 169 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று 10 ஆயிரத்து 396 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 24 ஆயிரத்து 169 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 22 அயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு தற்போது கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

நேற்று 116.90 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் உயர்ந்து 116.97 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News