செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மாணவனை வழிமறித்த காட்சி.

வாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2019-09-17 05:25 GMT   |   Update On 2019-09-17 07:01 GMT
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே வாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை போலீஸ்காரர் மடக்கி பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தை ஓட்டியவாறே கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற நபரை விட்டு விட்டு அதே நேரம் சைக்கிளில் சென்ற ஒரு சிறுவனை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார். சைக்கிளை பூட்டி அந்த சிறுவனிடம் இருந்து போலீஸ்காரர் பறிமுதல் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் அந்த சிறுவனை அங்கேயே நிற்க வைத்து அலைக்கழித்த பின்னரே  அனுப்பி வைத்தார்.


இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவையடுத்து போக்குவரத்து விதிமுறைகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் சைக்கிளில் செல்லும் நபர்களுக்கும் நீதிமன்றத்தில் ஏதாவது புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு என 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒவ்வொரு மாதமும் பதியப்பட வேண்டும் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் தரும் உத்தரவே இதுபோன்ற காரியங்களுக்கு காரணமாகும்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எந்த போலீஸ் நிலையத்திலும் 6 மாதங்களுக்கு மேல் பணியாற்றியது இல்லை என்றும், அவர் தனது பணியை விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத காரணத்தினால் பல மாவட்டத்திற்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாகன தணிக்கையின்போது மாணவனிடம் இருந்து சைக்கிளை பறிமுதல் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News