செய்திகள்
கொள்ளை

மல்லாங்கிணறு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.6½ லட்சம், 25 பவுன் நகை கொள்ளை

Published On 2019-08-08 10:41 GMT   |   Update On 2019-08-08 10:41 GMT
மல்லாங்கிணறு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் புகுந்து ரூ.6 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தோணுகால் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). ரியல் எஸ்டேட், ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.

இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், மாரிச்செல்வம் என்ற மகனும் உள்ளனர். நேற்று முருகன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். கருப்பாயி 100 நாள் வேலைக்குச் சென்றுவிட்டார். மாரிச் செல்வம் கதவை சாத்திவிட்டு மாடியில் லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத 3 பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து நைசாக வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரம், 25 பவுன் நகையை கொள்ளையடித்தனர்.

கொள்ளையடிக்கும் போது வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. உடனே மாரிச்செல்வம் மாடியிலிருந்து கீழே பார்த்துள்ளார். கைக் குழந்தையுடன் நின்றிருந்த பெண்கள் தண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளனர்.

மாரிச்செல்வம் கீழே இறங்கி வந்து வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அதற்குள் அந்த பெண்கள் மாயமானார்கள். சிறிது நேரம் கழித்து மாரிச்செல்வம் பீரோவை கவனித்த போது நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய பெண்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News