செய்திகள்
முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்

அரசு பஸ் கண்டக்டரை கைது செய்ய கோரி ராசிபுரம் நகராட்சியை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

Published On 2019-08-07 16:19 GMT   |   Update On 2019-08-07 16:19 GMT
அரசு பஸ் கண்டக்டரை கைது செய்ய கோரி ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம்:

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்த குடிநீர் குழாய் அருகில் கடந்த 2-ந் தேதி சிறுநீர் கழித்த வையப்பமலையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் செந்தில்ராஜாவை (வயது 40), நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் (48) துப்புரவு பணியாளர் ஆனந்தன் (49) ஆகியோர் தட்டி கேட்டதாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செந்தில்ராஜா, பன்னீர்செல்வம், ஆனந்தன் ஆகியோர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்தநிலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்களை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் செந்தில்ராஜாவை கைது செய்ய கோரி நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கணேசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டக்டர் செந்தில்ராஜாவை கைது செய்ய போலீசார் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதில் சமாதானம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு திரும்பினர். முற்றுகை காரணமாக காலை 9 மணி வரை அவர்கள் வழக்கமான பணிக்கு செல்லவில்லை. இந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News