செய்திகள் (Tamil News)
சாலை மறியல்

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2019-08-04 13:27 GMT   |   Update On 2019-08-04 13:27 GMT
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:

தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்து போனதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது. ஆண்டிப்பட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டதின்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.

குடிநீர் திறக்கும் பம்ப் ஆபரேட்டர் முறையாக தண்ணீர் திறப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சேடப்பட்டி பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் தடைபட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆண்டிப்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சம்பவம் குறித்து அறிந்ததும் ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா தலைமையில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News