செய்திகள்
தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட்ட காட்சி.

திருவண்ணாமலையில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகை

Published On 2019-08-02 17:11 GMT   |   Update On 2019-08-02 17:11 GMT
திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திநகரில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் காங்கேயன், துணைத் தலைவர்கள் நாகராஜன், வீரபத்திரன், துணை செயலாளர்கள் சரவணன், கமலக்கண்ணன், ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தின் முன்பு அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும். பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் நல வாரிய பணப்பயன்கள் கணிசமாக உயர்த்த வேண்டும். நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.5 லட்சமும், மாத ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தையும் நல வாரியத்தின் மூலம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிலாளர் நல அலுவலரிடம் மனு அளிக்க சென்றனர். ஆனால் அவர்களிடம் 5 பேர் மட்டும் சென்று மனு அளிக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News