செய்திகள்
அப்துல்கலம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இன்று 4-வது ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் நினைவிடத்தில் பொதுமக்கள்-மாணவர்கள் அஞ்சலி

Published On 2019-07-27 05:10 GMT   |   Update On 2019-07-27 05:10 GMT
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேக்கரும்பு என்ற இடத்தில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது.

இங்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தேசிய நினைவகம் கட்டப்பட்டு 2017-ம் ஆண்டு இதே நாளில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனையடுத்து இந்த தேசிய நினைவகத்திற்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் வருகை தந்து அப்துல்கலாம் சமாதிக்கு அஞ்சலி செலுத்திச் சென்றதுடன், இங்கு அமைக்கப்பட்டுள்ள கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அப்துல்கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தேசிய நினைவகத்திற்கு காலை 9 மணியளவில் அப்துல்கலாம் குடும்பத்தினரான அவரது மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மற்றும் சகோதரர் மகள் நசிமா மரைக்காயர்,பேரன்கள் சேக்சலீம்,சேக்தாவூத் ஆகியோர் வருகை தந்தனர்.


அங்கு ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அப்துல்கலாம் சமாதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் இன்டர்நே‌ஷனல் பவுன்டேசன் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags:    

Similar News