செய்திகள்
சேற்றில் சிக்கி இறந்து போன பசுமாடு

சேற்றில் சிக்கி பசு மாடு உயிரிழப்பு - 2 நாளாக ஏங்கி தவிக்கும் கன்றுக்குட்டி

Published On 2019-07-23 16:33 GMT   |   Update On 2019-07-23 16:33 GMT
ஊசுட்டேரி அருகே சேற்றில் சிக்கி பசுமாடு உயிரிழந்தது தெரியாமல் 2 நாளாக கன்றுக்குட்டி அதன் அருகிலேயே ஏக்கத்துடன் படுத்துக் கொண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேதராப்பட்டு:

புதுவையில் மிக பெரிய ஏரியாக ஊசுட்டேரி உள்ளது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி மூலம் தொண்டமாநத்தம், அகரம், பத்துக்கண்ணு, கரசூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர்.

மேலும் கால்நடைகள் மேய்ச்சலுக்கும் ஊசுட்டேரி பயன்பட்டு வந்தது. ஆனால், வரலாறு காணாத அளவில் ஊசுட்டேரி தற்போது முற்றிலும் வறண்டு போய் விட்டது. ஒருசில இடங்களில் மட்டும் குட்டை போல் சிறிதளவு தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊசுட்டேரியில் மேய்ச்சலுக்கு கன்றுடன் வந்த பசுமாடு ஒன்று தண்ணீர் குடிக்க குட்டையில் இறங்கிய போது சேற்றில் சிக்கி இறந்து போனது.

ஆனால், உடன் வந்த கன்றுகுட்டி தாய் பசுமாடு இறந்ததை அறியாமல் சேறு, சகதியில் இருந்து மீண்டு வந்து விடும் என்று அதன் அருகிலேயே ஏக்கத்துடன் படுத்துக் கொண்டது.

அதே வேளையில் பசு மாட்டின் சொந்தக்காரர் மாடு - கன்று குட்டியை தேடியும் வரவில்லை.

இந்த நிலையில் 2 நாட்களாக தொடர்ந்து பசுமாட்டின் அருகிலேயே கன்றுக்குட்டி இருந்ததை பார்த்த ஒருவர் அதன் அருகே சென்று பார்த்தார்.

அப்போது பசு மாடு சேற்றில் சிக்கி இறந்து போனதை கண்டார். கன்று குட்டிக்கு புல் உள்ளிட்டவற்றை கொடுத்த போது அதனை கன்றுகுட்டி உண்ண மறுத்து தாய் பசுமாட்டையே பார்த்து ஏங்கியபடி இருந்தது.

இதையடுத்து இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் ஊசுட்டேரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News