செய்திகள்
விபத்து

மத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதி பெண் பலி

Published On 2019-07-18 15:56 GMT   |   Update On 2019-07-18 15:56 GMT
மத்தூர் அருகே இன்று காலை இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாகிசெட்டி (வயது70). இவரது மனைவி சுபத்ரா (60). இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ள்னர். இவர்கள் இருவரும் இன்று காலை மத்தூரை அடுத்த அத்திகானபள்ளியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்க காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உள்ள கண்ணன்ட அள்ளி பிரிவு சாலையில் வந்தனர். 

அப்போது திருவண்ணா மலையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று வந்து நாகிசெட்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகி செட்டி கால்முறிவு ஏற்பட்டு காயம் அடைந்தார். வண்டியில் பின்னால் அமர்ந்த அவரது மனைவி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுபத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

நாகிசெட்டியை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திடீரென்று திரண்டனர்.

அப்போது அவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அடிக்க இதுபோன்று தொடர் விபத்துக்கள் ஏற்படுவதால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விரைவில் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News