செய்திகள்
கைது (கோப்பு படம்)

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாசிக் தொழிலாளர்கள் சாலை மறியல் - 75 பேர் கைது

Published On 2019-07-10 17:05 GMT   |   Update On 2019-07-10 17:05 GMT
புதுவையில் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாசிக் தொழிலாளர்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை அரசு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 57 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், பல ஆண்டாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று 15-வது நாளாக போராட்டம் நீடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பாசிக் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்திற்கு வந்தனர். ஊர்வலத்துக்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜா ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஏ.ஐ.டி.யூ.சி. செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

ஊர்வலம் ராஜீவ்காந்தி சிலை அருகே வந்தபோது முருகா தியேட்டர் முன்பு ஊழியர்கள் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். சுமார் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News