செய்திகள்

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அம்மா ஸ்கூட்டர் வாங்க இன்றுமுதல் விண்ணப்பம்

Published On 2019-06-20 10:04 GMT   |   Update On 2019-06-20 10:04 GMT
தனியார் அலுவலகங்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள், அம்மா ஸ்கூட்டர் வாங்க இன்று முதல் ஜூலை மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை:

தனியார் அலுவலகங்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள் வேலைக்கு செல்ல வசதியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. மகளிருக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் ஆகியவற்றில் எதுகுறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி மகளிருக்கு கூடுதல் வசதி பொறுத்தப்பட்ட வாகனத்திற்கு மானியத் தொகையாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.31,250 இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெண்கள் கியர் அல்லாத 125 சி.சி.க்கு மிகாமல் வாகனத்தை வாங்க வேண்டும்.

மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வாங்கும் பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும் ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் அதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2018-19-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்கு உரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இன்று (20-ந்தேதி) முதல் ஜூலை மாதம் 4-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News