செய்திகள்

உசிலம்பட்டி அருகே விபத்து- ஆட்டோ மீது லாரி மோதி மாணவர்கள் காயம்

Published On 2019-06-19 09:56 GMT   |   Update On 2019-06-19 09:56 GMT
உசிலம்பட்டி அருகே இன்று காலை நடந்த விபத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் மாணவ, மாணவிகள் 9 பேர் காயமடைந்தனர்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், எழுமலையில் இருந்து உசிலம்பட்டிக்கு இன்று காலை ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அதில் எருமார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

ரங்கசாமிபட்டி விலக்கு என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ வந்தபோது எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ நசுங்கியது. இடுபாடிகளில் சிக்கிய மாணவிகள் கூக்குரலிட்டனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ஆட்டோவில் காயங்களுடன் சிக்கிய மாணவ- மாணவிகளை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உசிலம்பட்டி சரஸ்வதி நாடார் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் தட்சிணாமூர்த்தி, பிரகாஷ், டி.இ.எல்.சி. பெண்கள் பள்ளியின் பிளஸ்-2 மாணவிகள் மகாலட்சுமி, அர்ச்சனா, சீதாலட்சுமி (பிளஸ்-1), 10-ம் வகுப்பு மாணவிகள் கோபிகா, யாஷிகா, சாந்தினி, டி.இ.எல். சி. ஆண்கள் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவி சீதாலட்சுமிக்கு கைமுறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்த பொன்ராஜ் (29) என்பவரை கைது செய்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர் காராம்பட்டியை சேர்ந்த விவேக் (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News