செய்திகள்

மானை வேட்டையாடிய வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2019-05-14 16:18 GMT   |   Update On 2019-05-14 16:18 GMT
தருமபுரி அருகே புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரூர்:

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் வாதாப்பட்டி காப்பு காட்டையொட்டி அனுமன் தீர்த்தம்-அரூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒரு நபர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடிவிட்டார். அந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் பிளாஸ்டிக் பைகளில் பொட்டலங்களாக மான் இறைச்சி கட்டப்பட்டு மூட்டைக்குள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் தப்பியோடிய நபர் ஊத்தங்கரை அடுத்துள்ள நல்லவம்பட்டி புதூரை சேர்ந்த மகேஷ் (வயது35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் மகேஷை வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

பின்னர் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News